Tamilசினிமா

காஜல் அகர்வாலின் காதல் குறித்து கூறிய நிஷா அகர்வால்

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும், கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.

காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும் முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால் கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.