Tamilசெய்திகள்

காதலனை தேடி வந்த கேரள மாணவி கூட்டு பலாத்காரம்

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரியை சேர்ந்த கூலித்தொழிலாளி தரணி (22) என்பவருக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது.

தனது காதலனை பார்க்க விரும்பிய மாணவி தன்னை கிருஷ்ணகிரி அழைத்து செல்லுமாறு ஏற்கனவே பழக்கமான கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். விபின்ராஜ் கடந்த 2-ந்தேதி தனது நண்பர்கள் அகித்ராஜ் (23), ஜோபின் (23) ஆகியோருடன் மாணவியை காரில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தார். வரும் வழியில் விபின்ராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

பின்னர் ஓசூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தனது காதலன் தரணியை தொடர்பு கொண்ட மாணவி, நடந்த விவரத்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காமராஜ் நகரில் உள்ள தனது பெரியப்பா மகள் நதியா என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்று மாணவிக்கு அடைக்கலம் கொடுத்தார். மாணவி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி அவரது காதலன் தரணியை கேரள மாநிலம், முக்கம் போலீசார் தேடி வந்தனர்.

அவர் பேரிகை காமராஜ் நகரில் இருப்பதை அறிந்த போலீசார் தரணியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவியை மீட்ட போலீசார் அவர் கொடுத்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.