பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை ஊதித்தள்ளி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே மார்டினை (சுலோவக்கியா) வெளியேற்றினார். 5 மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்பாலெஸ் பானா 7-5, 6-7 (5-7), 6-3, 3-6, 8-6 என்ற செட் கணக்கில் போராடி கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். சிட்சிபாஸ் (கிரீஸ்), கச்சனோவ் (ரஷியா), தியாகோ மான்டிரோ (பிரேசில்), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி), மார்டன் புக்சோவிச் (ஹங்கேரி) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக தாண்டினார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை விரட்டியடித்தார். இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அனா போக்டனை சாய்த்தார்.
2016-ம் ஆண்டு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தோல்வி கண்டு 2-வது சுற்றுடன் நடையை கட்டினார்.