Tamilவிளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கின் 7-5, 3-6, 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பாபி போக்னினியை வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் ஹெர்பெர்ட் (பிரான்ஸ்), காஸ்டன் (பிரான்ஸ்), டாமி பால் (அமெரிக்கா), பெட்ரோ மார்டினெஸ் (ஸ்பெயின்), நிஷிகா (ஜப்பான்), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை ஓசியன் டோடினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 2-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை காதரினா ஜவாத்ஸ்காவை சாய்த்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை விரட்டியடித்தார்.

மற்ற ஆட்டங்களில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), பிரோன்கோவா (பல்கேரியா), சாரா எர்ரானி (இத்தாலி), சினிய கோவா (செக்குடியரசு), அனிசி மோவா (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர். ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.