விளையாட்டில் இதுபோன்று நடக்கும் – விராட் கோலி
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று துபாயில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பஞ்சாப் 97 ரன்னில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன் குவித்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (132 ரன், 69 பந்து 14 பவுண்டரி 7 சிக்சர்) சதம் அடித்தார்.
பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 17 ஓவரில் 109 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் வீராட்கோலி 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
பஞ்சாப் தரப்பில் ரவி பிஷ்னொய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் பெற்றனர். நேற்றைய ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் கொடுத்த 2 கேட்ச்களை வீராட்கோலி தவறவிட்டது திருப்புமுனையாக அமைந்தன.
தோல்வி குறித்து வீராட் கோலி கூறியதாவது:-
பந்து வீச்சின்போது நடுப் பகுதியில் நாங்கள் நன்றாக இருந்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் கூடுதலாக 30 முதல் 40 ரன்னை விட்டுக்கொடுத்து விட்டோம். அவர்களை (பஞ்சாப்) 180 ரன்னுக்குள் கட்டுப் படுத்தியிருந்தால் நாங்கள் முதல் பந்தில் இருந்தே நெருக்கடியுடன் விளையாடி இருக்க மாட்டோம்.
விளையாட்டில் இது போன்று நடக்கும். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமக்கு நல்ல ஆட்டமும் கிடைக்கும், மோசமான ஆட்டமும் கிடைக்கும். தவறுகளில் இருந்து நாம் பாடங்களை கற்றுக்கொள்வதுதான் முக்கியம். நான் 2 கேட்ச்களை தவற விட்டேன். இது எனது நாளாக அமைய வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஷ் ராகுல் கூறும்போது, ‘இந்த வெற்றி முழுமையான அணி செயல் பாட்டால் கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் எனது பேட்டிங்கில் முழுமையான கட்டுப்பாடி இருக்கும் என்று நான் நம்பவில்லை.
இதனால் சிறிது பதட்டம் ஏற்பட்டாலும் சில பந்துகளை நான் எதிர்கொண்டு விட்டால் பின்னர் ஆட்டத்தில் நிலைநிறுத்திக் கொள்வேன் என்பதை அறிந்து இருந்தேன். இதனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்’ என்றார்.