Tamilவிளையாட்டு

டோனியின் ஐந்து முக்கிய சாதனைகள்

கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள் தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டோனி. கிரிக்கெட்டை ரசிக்கும், விளையாடும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த டோனி, திடீரென நேற்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் டோனி பங்கேற்கவில்லை. அப்போதில் இருந்தே டோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் கொடி கட்டி பறந்தன. ஆனாலும், இந்திய அணிக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கூலாக (Cool) வலம் வரும் டோனி, ஓய்வு அறிவிப்பையும் எந்த முன் அறிவிப்பும், எந்த படோபடமும் இன்றி மிக சாதாரணமாக அறிவித்துவிட்டார். டோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரது சாதனைகள் குறித்த பதிவுகள், உங்களை கிரிக்கெட் களத்தில் மிஸ் செய்கிறோம் என பல அடுக்கடுக்கான பதிவுகளை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் டோனியின் ஆக்கிரமிப்பு நேற்று இரவு முதல் தற்போது வரை உள்ளது.

எளிதில் அசைக்க முடியாத தோனியின் 5 சாதனைகள்

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் திகழ்ந்த டோனி, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். சாதனைகள் எப்போதும் முறியடிக்கக் கூடியவை என்றாலும் சில சாதனைகளை எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு நீண்ட காலம் சில சாதனைகள் அமைந்து விடும். அந்த வகையில் டோனியின் சாதனைகள் சிலவற்றை காண்போம்.

ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன்

இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே, அதாவது 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை இந்தியாவுக்கு டோனி பெற்று தந்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை உச்சி முகர்ந்ததற்கு டோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் திறமையும் ஒரு காரணமாகும். 2013- ஆம் ஆண்டு நடைபெற்ற மினி உலக கோப்பை தொடரிலும் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

கேப்டனாக அதிக போட்டிகள்

200 ஒருநாள் கிரிக்கெட், 60 டெஸ்ட் போட்டிகள் , 72 டி 20 போட்டிகள் என மொத்தம் 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் 324 சர்வதேச போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

இறுதிப்போட்டிகளில் அதிக வெற்றியை ருசித்த கேப்டன் (ஒருநாள் கிரிக்கெட்)

பல நாட்டு அணிகள் பங்கேற்ற 6 தொடர்களின் இறுதி போட்டியில் டோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். அவற்றில் இந்தியா 4 தொடர்களில் வெற்றியை ருசித்தது. டோனி கேப்டனாக 110 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். ரிக்கி பாண்டிங் கேப்டனாக 165 ஒருநாள் போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளார்.

அதிக நாட் அவுட்

டோனி 84 ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நாட் அவுட் ஆக திகழ்ந்துள்ளார். தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஷான் பொல்லாக்கிற்கு (72 நாட் அவுட்) அடுத்த இடத்தில் உள்ளார். தோனி நாட் அவுட் ஆக இருந்த 84 ஒருநாள் போட்டிகளில் 51 ஆட்டங்கள் இரண்டாவது பேட்டிங் செய்த போது அதாவது சேஷிங் செய்த போது இருந்த இன்னிங்ஸ்கள் ஆகும். டோனி இவற்றில் 47 ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். வெறும் 2 போட்டிகள் மட்டுமே அணிதோல்வியை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்

டோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். விக்கெட் கீப்பிங்கில் தனி பாதையை உருவாக்கியவர் என்றே சொல்லலாம். பல போட்டிகளில் டோனி மின்னல் வேகத்தில் செய்த ஸ்டம்பிங்குகள் ரன் அவுட்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த சாதனைக்கும் சொந்தக்காரர் டோனியே. 350 போட்டிகளில் 123 ஸ்டம்பிங்குகளை டோனி செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங்குகளை செய்த ஒரே விக்கெட் கீப்பர் தோனி மட்டுமே. விக்கெட் கீப்பிங்கில் அதிக விக்கெட்டுகளை (கேட்ச், ஸ்டம்பிங்) எடுத்த வீரர்கள் பட்டியலில் பவுச்சர், கில்கிரிஸ்ட் அடுத்தபடியாக 3 ஆம் இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *