மீண்டும் அஜித் ரசிகர்களுடன் மோதும் கஸ்தூரி
தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த கஸ்தூரி தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்திலும் பரபரப்பாக இயங்கி சமூக அரசியல் விஷயங்கள் பற்றி சர்ச்சை கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. 3-வது திருமணம் செய்த வனிதாவுடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் ரசிகர்களுக்கும் கஸ்தூரிக்கும் வலைத்தளத்தில் ஏற்பட்ட மோதல் இப்போது மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் முகப்பில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ள ரசிகர் ஒருவர் கஸ்தூரி கதாநாயகியாக நடித்த பழைய படத்தில் இருந்து அவரது பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு இது நம்ம கஸ்தூரி கிழவிதானே என்று குறிப்பிட்டு அந்த காலத்தில் அழகாக இருந்துள்ளார் என்று சுட்டி காட்டி பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் அதை ஆமோதித்து பதிவுகளை பகிர்ந்தனர். இது கஸ்தூரிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எதற்கு தேவையில்லாமல் ஆணியை புடுங்குவானேன்? அதை எனக்கு சிசி பண்ணுவானேன். இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் கேட்டாரா அவர் பெயரை சொல்லி அசிங்கமா பேசுங்கன்னு. கஸ்தூரி கிழவிக்கு அஜித்தை விட ஐந்து வயது குறைவுதான். போய் வேற வேலை இருந்தால் பாருங்கள்.
உங்களை மாதிரியான மோசமான ரசிகர்களால் அஜித்தின் அனைத்து நல்ல ரசிகர்களுக்கும் கெட்ட பெயர். அதை புரிகிற அளவுக்காவது அறிவு இருக்கிறதா இல்லையா. அஜித்குமார் சிறந்த மனிதர். அவரை மதிக்கிறேன். அவருக்கு பெருமை சேருங்கள். இதுபோல் மோசமாக செயல்பட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.