கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்
கொரோனா வைரசின் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.
இதற்காக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பலர் தங்கள் பிளாஸ்மா அணுக்களை சிகிச்சைக்காக தானமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா சிகிச்சை மையத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் பேசிய ஆளுநர் தமிழிசை, ’கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில் உரிய தகுதியுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். மாநிலத்தில் பிளாஸ்மா தட்டுப்பாட்டால் வைரஸ் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க மக்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்’ என்றார்.