Tamilவிளையாட்டு

ஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது

‘அட்ரியா டூர்’ என்ற பெயரில் நலநிதி டென்னிஸ் கண்காட்சி போட்டியை செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சமீபத்தில் நடத்தினார். இதில் பங்கேற்ற கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னோ கோரிச் (குரோஷியா), விக்டர் டிரோக்கி (செர்பியா) ஆகிய வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

அத்துடன் இந்த போட்டியை முன்னின்று நடத்திய ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் அவருடைய மனைவி ஜெலினாவும் கொரோனா தொற்றின் தாக்குதலுக்கு ஆளானது உறுதியானது. போட்டியின் போது போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தான் கொரோனா தொற்று பரவ காரணம் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. நடந்த சம்பவத்துக்காக ஜோகோவிச் வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜோகோவிச்சின் பயிற்சியாளரும், 2001-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 48 வயது முன்னாள் வீரர் கோரன் இவானிசெவிச் (குரோஷியா) புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவானிசெவிச், குரோஷியா சுற்று கண்காட்சி டென்னிஸ் போட்டியின் இயக்குனராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இவானிசெவிச் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘கடந்த 10 நாட்களில் எனக்கு நடத்தப்பட்ட 2 மருத்துவ பரிசோதனைகளில் ‘நெகட்டிவ்’ (கொரோனா இல்லை) என்று முடிவு வந்த நிலையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராதவிதமாக ‘பாசிட்டிவ்’ (கொரோனா தொற்று இருப்பதாக) என்று தெரியவந்துள்ளது. எனக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பேன். கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *