Tamilசெய்திகள்

அக்டோபர் மாதம் சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தை தொடரும் – ஆய்வில் தகவல்

சென்னை மற்றும் தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் எப்படி இருக்கும்?, எத்தனை பேருக்கு தொற்று பரவும்? எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும்? போன்றவை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவில், சென்னையில் கொரோனா தொற்று அக்டோபர் மாதம் உச்சநிலையை அடையும் என்றும், தொற்று தவிர்ப்பு செயல்பாடுகளை மக்கள் பின்பற்றுவதைப் பொறுத்தே கொரோனாவின் 2-வது எழுச்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு, கொரோனா உச்ச நிலையை அடையும் வேகத்தை 2 அல்லது 3 வாரங்களுக்கு குறைக்கலாம். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் வேறு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதன்படி, அடுத்த ஜூலை மாதம் மத்தியில் தமிழகத்தில் 2.70 லட்சம் மக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் என்றும், இதில் 60 சதவீத தொற்று சென்னையில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன், தொற்றுநோய்த் துறைத் தலைவர் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கூறுகையில், ‘சென்னையில், ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருக்கும். இந்த எண்ணிக்கை ஜூலை 15-ந் தேதியளவில் 1.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனர்.

தொற்று பற்றிய ஆய்வின் கணிப்பின்படி, இம்மாதம் ஜூன் 30-ந் தேதியில் சென்னையில் கொரோனா பாதிப்பு 71 ஆயிரத்து 24, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 499 ஆகவும், ஜூலை 1-ந் தேதியில் சென்னையில் 71 ஆயிரத்து 714, தமிழகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 341 ஆகவும், ஜூலை 15-ந் தேதியில் சென்னையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 244, தமிழகத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகவும் பரவி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பும் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை மாத மத்தியில் சென்னையில் 1,654 இறப்புகளும், தமிழகம் முழுவதும் இறப்பு எண்ணிக்கை 3,072 ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று உச்ச நிலையை அடைந்ததும் சில வாரங்களில் படிப்படியாக இறங்கத் தொடங்கும்.

தொற்றுநோய் டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறும்போது, ‘கொரோனா பரவல் உச்சநிலையை அடைவதை தடுக்க முடியாது என்றாலும் ஊரடங்கு நடவடிக்கைகள், உச்சநிலையை எட்டும் காலகட்டத்தை தாமதப்படுத்தும். ஊரடங்கின் விளைவுகளை இன்னும் 10 நாட்களில் காணலாம். தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *