சச்சினை அவுட் ஆக்கியதால் கொலை மிரட்டலுக்கு ஆளான இங்கிலாந்து பந்து வீச்சாளர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் டிம் பிரெஸ்னன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
2011-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து வந்தது. ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 91 ரன் எடுத்திருந்தபோது, எனது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அந்த டெஸ்டில் தெண்டுல்கர் செஞ்சூரி அடித்திருந்தால், சர்வதேச போட்டியில் 100-வது சதத்தைத் தொட்டு இருப்பார்.
நான் அவருக்கு போட்ட பந்து விக்கெட்டை வீழ்த்தும் என்று கருதவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய நடுவர் ராட் டக்கர் எல்.பி.டபிள்யூ கொடுத்து விட்டார். இந்த அவுட் கொடுக்கப்படாமல் இருந்தால், தெண்டுல்கர் நிச்சயமாக சதம் அடித்து இருப்பார். நாங்கள் இந்த டெஸ்ட் தொடரை வென்று உலகின் நம்பர் 1 அணியாக திகழ்ந்தோம்.
தெண்டுல்கரை அவுட் செய்ததால், எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல் துறையிடம் புகார் அளித்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 99-வது செஞ்சூரியிலிருந்து 100-வது சதத்தை கடக்க தாமதம் ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 99-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
அதன்பிறகு 2012-ம் ஆண்டு இறுதியில்தான் ஆசிய கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக தனது 100-வது சதத்தை பதிவு செய்தார். அதன் பின்னர் 2013-ம் ஆண்டு தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் வரலாற்றில் தெண்டுல்கர் தவிர எந்த பேடஸ்மேனும் 100 சர்வதேச சதங்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.