சீன மொழியில் வெளியாக உள்ள தனுஷின் ‘அசுரன்’
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். சிவாராஜ் குமார் நடிக்க உள்ளார்.
இதனிடையே அசுரன் படத்தை பார்த்து வியந்த சீன திரையுலகினர், அப்படத்தை சீன மொழியில் ரீமேக் செய்ய முன்வந்துள்ளதாகவும், இதுகுறித்து சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று அசுரன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதுகுறித்து அசுரன் படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது: “அசுரன் படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை. அது வெறும் வதந்தி. சீன மொழியில் ரீமேக் செய்ய யாரும் எங்களை அணுகவில்லை. ஆனால் அசுரன் படத்தை சீன மொழியில் டப் செய்து வெளியிட உள்ளோம். அதுவும் கொரோனா முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தான்” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.