பொன்னியின் செல்வன்’ மீண்டும் தொடங்குமா? – மணிரத்னம் பதில்
கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. தியேட்டர்களில் படம் பார்க்க வரும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையுலகம் மீண்டும் செயல்பட தொடங்கியதும் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும். திரைப்பட துறை தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் விதமாக நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். அரசு உதவியும் சினிமா துறைக்கு தேவைப்படுகிறது.
நான் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டு உள்ளது. படத்துக்காக பிரமாண்ட போர்க்கள காட்சிகள் மற்றும் அதிகமான கூட்டத்தினர் பங்கேற்கும் காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது. இந்த காட்சிகளை எப்படி படம்பிடிக்க போகிறேன் என்று புரியவில்லை. ஆனாலும் அந்த பணிகளை செய்து படத்தை முடிப்பேன்”
இவ்வாறு மணிரத்னம் கூறினார்.