வெட்டுக்கிளிகளின் ஆபத்தை தடுக்கும் முயற்சியில் அண்ணா பல்கலைக்கழகம்!
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவை ஒருபுறம் தாக்கிவரும் நிலையில், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து கபளகரம் செய்து வருகிறது. ‘லோக்கஸ்ட்’ வகையான இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஏமன், ஈரான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இருக்கிறது.
பசுமையான இடங்களை நோக்கி படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கோடிக்கணக்கில் புகுந்து, நாசம் செய்கிறது. இதுவரை இந்தியாவின் 41 மாவட்டங்களின் விளைநிலங்களை சூறையாடியுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வேளாண்துறை சொல்லி இருந்த நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் இருந்ததை பார்த்து விவசாயிகளும், மக்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
இதனை ஆய்வுசெய்த வேளாண்துறை அதிகாரிகள், விவசாய நிலங்களை சூறையாடும் ‘லோக்கஸ்ட்’ வகை வெட்டுக்கிளிகள் இல்லை என்றும், சாதாரண வகை வெட்டுக்கிளிகள்தான் என்றும் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் எருக்கஞ்செடிகளில் மட்டும்தான் காணப்படும் எனவும் கூறினர்.
இந்தநிலையில், தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை ஆயத்தமாகி வருகிறது. வானூர்தி துறையின் இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் உள்பட சுமார் 80 பேர் இதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
‘டிரோன்’(ஆளில்லா குட்டி விமானம்) உதவியுடன் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பது எப்படி?, அதனை கட்டுப்படுத்துவது எப்படி?, அதற்கான தொழில்நுட்பங்களை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்? என்று அண்ணா பல்கலைக்கழக வானூர்தி துறை ஆராய்ச்சியாளர்கள் வேளாண்துறையுடன் இணைந்து ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக வானூர்தி துறையின் மூத்த விஞ்ஞானி வசந்த்ராஜ் கூறியதாவது:-
வெட்டுக்கிளிகளில் புரதம் அதிகமாக இருப்பதால், அதனை பிடித்து உரத்துக்கும் பயன்படுத்த முடியும். எனவே இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் வந்தால், வலை அமைத்து டிரோன் உதவியுடன் சுறாமீன் கடலில் வேட்டையாடும் வியூகத்தை பின்பற்றி பிடிக்கவும், தடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதாவது, சுறாமீன் கூட்டமாக சேர்ந்து மீன்கூட்டங்களை சுற்றி வளைத்து, வேட்டையாடும். அதையே தான் இதில் பின்பற்ற இருக்கிறோம்.
அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று ஆலோசித்து வருகிறோம். இதற்காக தற்போது 25 டிரோன்கள் தயார் நிலையில் இருக்கின்றன. தேவைக்கு ஏற்றாற்போல், கூடுதலாக டிரோன்களையும் தயாரிக்க உள்ளோம்.
மேலும், அதிகளவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இருக்கும் பட்சத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம்?, அதனை பிடிக்க என்னவகையான மருந்துகளை உபயோகிக்க வேண்டும்? எந்த அளவுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்? உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்துறையினர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.