மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் கைது! – காவல்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.