டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.
கேப்டன் பொறுப்பை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. டெஸ்டுக்கு மட்டும் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவருக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு 2 கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீரர் அதுல் வாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியை பிரித்து வழங்குவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் விராட் கோலியின் பணி சுமை குறையும். ஆனால் இந்த சுமையை அவர் விரும்புவார். 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று அவர் நினைப்பார்.
தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தி 4 முறை கோப்பையை வென்றுள்ளார். ஆனால் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி ஒருமுறை கூட ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை.
எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு விராட் கோலி கேப்டனாக தொடரலாம். 20 ஓவர் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும். இதன் மூலம் கோலிக்கு நெருக்கடி குறையும்.
இவ்வாறு அதுல் வாசன் கூறியுள்ளார்.