அச்சு ஊடகங்களை நெருக்கடியில் இருந்து மீட்க திமுக துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், அச்சு ஊடகங்களான நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதுகுறித்து, பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை என்னுடைய கவனத்திற்கும் கொண்டுவந்து, அச்சு ஊடகங்கள் வழக்கம்போல மக்களின் குரலாக செயல்படுவதற்கு தி.மு.க. துணை நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளினை நேரில் தெரிவிப்பதற்காக மூத்த பத்திரிகையாளர்களான தினமலர் ஆதிமூலம், இந்து என்.ராம், தினகரன் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து, கோரிக்கைக் கடிதத்தை அளித்தனர்.
அதில், அவர்கள் மூவருடன், தினத்தந்தி இயக்குனர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், இந்தியன் எக்ஸ்பிரஸ் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையெழுத்திட்டிருந்தனர்.
நோய்த்தொற்று குறித்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் குறித்தும், சமூக வலைத்தளத்தின் பரப்பு அதிகரித்துவரும் இந்த காலத்தில், மக்களிடம் உண்மைச் செய்திகளை, நடுநிலையோடு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அச்சு ஊடகங்களான பத்திரிகைகளின் தேவை மிகவும் அதிகம்.
அவை நெருக்கடிக்குள்ளாவதில் இருந்து மீளும் வகையில் மத்திய அரசு, பத்திரிகை அச்சுக்காகிதம் மீதான வரியைக் குறைக்கவேண்டும்; அரசு விளம்பரங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும்; காலத்தின் தேவை கருதி அரசு விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும்; இவைதான் பத்திரிகைத் துறையின் முக்கியமான கோரிக்கைகள்.
பிரதமர் நரேந்திரமோடியின் முன் வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் நிறைவேறிட தி.மு.க. துணை நிற்கும் என்ற உறுதியினை அவர்களிடம் வழங்கியதுடன், கொரோனா நோய்த்தொற்றுப் பரவல், ஊரடங்கு நிலைமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலமாக தி.மு.க. செய்துள்ள, செய்துவரும் பணிகளையும் எடுத்துரைத்தேன்.
மக்களின் பட்டினிச் சாவினைத் தடுத்திடும் நோக்கத்துடன் உணவும், உணவுப் பொருட்களும் வழங்குவதற்காக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 17 லட்சம் அழைப்புகளைப் பெற்று, அவற்றை நிறைவேற்றியுள்ளோம். 165 சட்டமன்ற தொகுதிகளில் மக்களின் பசியாற்றிடும் வகையில், 36 நகரங்களில் 28 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மக்களுக்கு முழுமையான பலன் தந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், வணிகர்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் உள்பட பலருடனும் 50 முறைக்கு மேல் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தியதையும் அவர்களிடம் தெரிவித்தேன்.
தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் மக்கள் பக்கம் நின்று அவர்தம் நலனைப் பாதுகாக்கின்ற இயக்கம் என்பதற்கு இந்தப் பேரிடர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துக்காட்டிய அதேவேளையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சிகள், தாங்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியத்தையும், தாமதத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நடுநிலை தவறாத அச்சு ஊடகங்களான பத்திரிகைகள்தான் தொடர்ந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதையும் எடுத்துரைத்து விளக்கினேன்.
மாநிலத்தை ஆள்கின்ற அ.தி.மு.க. அரசோ, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசோ மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவை உணர்ந்ததாகத் தெரியவில்லை; மக்களுக்கு உதவிட அவர்களுடைய மனம் இரங்கவில்லை. தெளிவான திட்டமும் செயல்பாடுகளும் இல்லை என்பதைப் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்து, இவற்றை அச்சு ஊடகங்கள் முழுமையாக வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவித்தேன்.
மக்கள் பக்கம் நிற்கின்ற அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நிச்சயம் துணை நிற்பார்கள், பிரதமரிடம் இதனை வலியுறுத்துவார்கள் என்ற உறுதியினையும் வழங்கினேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.