அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்படும் – டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை சரிசெய்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளை அரசு ஆராயத் தொடங்கி உள்ளது. அதிக பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் மாதங்களில் பொருளாதாரங்களை மீட்டெடுப்பது குறித்தும், மூன்று கட்டங்களாக ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டிரம்ப் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார்.
மாநிலங்கள் படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக்கொள்ளலாம் என்றும், மத்திய அரசின் உதவியுடன் அந்தந்த மாநில ஆளுநர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.