என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் – போஸ்டர் ஒட்டிய அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா முன்னெச்சரிக்கையாக கோபியில் உள்ள வீட்டிலும், அலுவலகத்திலும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்திக்க வரவேண்டாம் என்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கோவில்கள், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வீடும், தோட்டமும், சட்டமன்ற அலுவலகமும் உள்ளது .
இந்தநிலையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தோட்டத்தில் உள்ள கதவின் முன்பாகவும், கோபி புதுப்பாளையத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்திலும் ஒரு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு 16-3-2020 முதல் வருகிற 31-3-2020 வரை கோபியிலும், சென்னையிலும் அமைச்சரை (கே.ஏ. செங்கோட்டையன்) சந்திக்க வருவதைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.