டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தில் இந்தியா நீடிப்பு
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது நாளிலேயே பணிந்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததோடு தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி மாற்றமின்றி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி எதிரொலியாக 4 புள்ளிகளை இழந்துள்ள இந்தியா 116 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கிறது.
தொடருக்கு முன்பாக 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, இந்திய தொடரை வென்றதன் மூலம் 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று 110 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் ஆஸ்திரேலியா (108 புள்ளி) 3-வது இடத்துக்கும், இங்கிலாந்து (105 புள்ளி) 4-வது இடத்துக்கும் இறங்கியது. தென்ஆப்பிரிக்கா (98 புள்ளி) 5-வது இடத்திலும், இலங்கை (91 புள்ளி) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் (85 புள்ளி) 7-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 8-வது இடத்திலும் (81 புள்ளி) உள்ளன.
டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) ‘நம்பர் ஒன்’ அரியணையில் நீடிக்கிறார். கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 3, 14 ரன் மட்டுமே எடுத்து சொதப்பிய இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளி எண்ணிக்கை 900-க்கும் கீழ் சரிந்துள்ளது. 20 புள்ளிகளை தாரை வார்த்துள்ள அவர் 886 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்கத்தில் (3, 5 ரன்) வீழ்ந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மொத்தம் 40 புள்ளிகளை இழந்துள்ள அவர் தற்போது 813 புள்ளிகளுடன் இருக்கிறார். அந்த டெஸ்டில் முதலாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய வீரர் புஜாரா 2 இடம் அதிகரித்து 7-வது இடத்தை எட்டியுள்ளார். அதே சமயம் ரஹானே (9-வது இடம்), மயங்க் அகர்வால் (11-வது இடம்) தலா ஒரு இடம் சறுக்கினர். அரைசதம் அடித்த இந்திய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா 17 இடங்கள் எகிறி 76-வது இடத்தை பெற்றிருக்கிறார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), நீல் வாக்னெர் (நியூசிலாந்து), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். இதே டெஸ்டில் இரு இன்னிங்சையும் சே
5 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் டாப்-10 இடத்துக்குள் நுழைந்தார். அவர் 4 இடம் அதிகரித்து 7-வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் 80-ல் இருந்து 43-வது இடத்துக்கு வந்துள்ளார்.