ஐபிஎல் பரிசு தொகை குறைப்பு! – பிசிசிஐ அதிரடி
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வரும் 29-ந்தேதி தொடங்குகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.
8 அணிகளுக்கு இடையான போட்டியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். பரிசுத்தொகையில் பிசிசிஐ அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் பெறும் அணி உள்பட தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அறிவித்துள்ள புதிய பரிசுத்தொகை விவரத்தின் படி 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.375 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.