100 திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி இலவசம் – புதுச்சேரி ஓட்டலின் அதிரடி சலுகை
புதுவை கரிக்கலாம் பாக்கத்தை சேர்ந்த நிருபன் ஞானபானு என்ற இளைஞர் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே ஜல்லிக்கட்டு என்ற ஓட்டலை தொடங்கி உள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஓட்டலில் வித்தியாசமான சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.
அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் மாமியார் – மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து பலர் திருக்குறள் ஒப்புவிக்க வருகிறார்கள். இதுவரை 4 பேர் மட்டுமே 100 திருக்குறளை ஒப்புவித்து விருந்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.
சில சிறுவர்கள் திருக்குறளை ஒப்புவிக்க வந்து அதை முழுமையாக கூற முடியாமல் செல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக திருக்குறள் ஒப்புவிக்க வந்தாலே அவர்களுக்கு இலவச அசைவ உணவு வழங்குவதாக ஓட்டல் அதிபர் நிருபன் ஞானபானு கூறினார்.
நிருபன் ஜானபானு மத்திய அரசின் பயிற்சி பள்ளியில் ஓட்டல் கலை கல்வி பயின்றவர். அதன்பிறகு வெளிநாடுகளுக்கு சென்று ஓட்டல் பணியில் ஈடுபட்டார். நைஜீரியா, இங்கிலாந்து, அமெரிக்கா என பல நாடுகளில் பணிபுரிந்த அவர் சொந்த ஊரில் ஓட்டல் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதுவையில் ஓட்டலை தொடங்கி உள்ளார்.
இவரது தந்தை ஞானபானு எழுத்தாளர் ஆவார். அவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அதை பின்பற்றி தமிழுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என கருதி திருக்குறள் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதாக கூறினார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு பல சிறுவர்கள் திருக்குறளை மனப்பாடம் செய்வதாக கேள்விப்பட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மாமியார் -மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நைஜீரியாவில் இருந்து நிருபன் ஞானபானு சமூக வலைதளம் மூலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். அதற்கு அதிக ‘லைக்’குகள் கிடைத்தது.
அந்த போராட்டத்தின் நினைவாக தனது ஓட்டலுக்கு ‘ஜல்லிக்கட்டு’ என்று பெயர் வைத்திருப்பதாக அவர் கூறினார்.