வில்லியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா தாமஸ்
சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தினார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “கதாநாயகியாக நடித்துக்கொண்டு இன்னொரு புறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்து இருக்கிறேன். நிவேதா என்றால் அழகான பெண் என்று நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் ஆகிய மூன்று பேருக்கும் மகளாக நடித்து இருக்கிறேன். மூன்று பேரும் சினிமாவில் ஜாம்பவான்கள். அப்படிப்பட்ட பெரிய நடிகர்களுக்கு மகளாக நடித்த வாய்ப்பு எனக்கு தான் கிடைத்துள்ளது. அவர்களிடம் நடிக்கும்போது நிறைய அனுபவங்களை கற்றேன்.
ரஜினி நடிப்பு பற்றி மட்டும் இன்றி மதத்தை சாராத மனிதனுக்கு சம்பந்தப்பட்ட ஆன்மிக விஷயங்கள் பற்றி நிறைய பேசுவார். திருமணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. ஆண்களில் பொய் பேசுபவர்களை பிடிக்காது. உண்மை பேசுபவர்களை மட்டுமே பிடிக்கும். எனக்கு கணவராக வருபவர் பயணங்களை விரும்புகிறவராக இருக்க வேண்டும். எனக்கு பயணம் செய்வது பிடிக்கும்.”
இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.