இரட்டை சதம் அடிப்பதற்காக நான் ஆடவில்லை – ரோகித் சர்மா
மும்பை பிராபோர்னில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது. இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா (20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்), அம்பத்தி ராயுடு (100 ரன்) சதத்தின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்டம் இழந்த போது 37 பந்துகள் மீதம் இருந்தது. கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் தனது 4-வது இரட்டை சதத்தை எட்டியிருப்பார்.
வெற்றிக்கு பிறகு 31 வயதான ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
எப்போதுமே பேட்டிங்கின் போது சதம் எடுக்க வேண்டும் என்றோ, இரட்டை செஞ்சுரி போட வேண்டும் என்றோ நினைத்து ஆடுவதில்லை. முடிந்த வரை நிறைய ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுவேன். இதுவரை நான் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இந்த ஆட்டத்தின் போது கூட எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு என்னிடம் வந்து, இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால் நான் எனது பேட்டிங் மீது மட்டும் கவனம் செலுத்தினேனே தவிர, இரட்டை சதம் அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமின்றி இந்த மைதானத்தில் ‘சேசிங்’ செய்வது கடினமாக இருக்காது. அதனால் அணிக்கு போதுமான ரன்கள் குவிப்பதை உறுதிசெய்யும் முனைப்புடன் செயல்பட்டேன். மற்றபடி இரட்டை சதம் எனது மனதில் தோன்றவில்லை.
அம்பத்திராயுடுவின் பேட்டிங் அருமையாக இருந்தது. இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் இழந்த நிலையில் பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த நெருக்கடியிலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி அவர் அபாரமாக ஆடினார்.
ராயுடுவின் இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 4-வது பேட்டிங் வரிசை பிரச்சினையை அவர் சரிசெய்து விட்டதாக நம்புகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை இந்த பேட்டிங் வரிசை குறித்து விவாதிக்க வேண்டியது இருக்காது.
இடக்கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆட்டத்தில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்தார். அவர் இது போன்று ‘ஸ்விங்’ செய்தால், உலகின் எந்த பேட்ஸ்மேனுக்கும் குடைச்சல் கொடுக்க முடியும்.
உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. அதனால் உலக கோப்பை அணியில் யாருக்கும் இடம் உறுதி என்று இப்போது சொல்ல மாட்டேன். ஆனாலும் கலீல் அகமது தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவார் என்று நம்புகிறேன். நியூசிலாந்திலும் விளையாட உள்ளோம். அதன் பிறகு தான் இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி நடக்கிறது. இவ்விரு நாடுகளிலும் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். அவ்விரு நாட்டு சீதோஷ்ணநிலையிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நான் நிறைய உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இங்கு எப்போதுமே உற்சாகமாக ஆடுவது உண்டு. நாம் பழக்கப்பட்ட இடத்தில் ஆடும் போது நம்பிக்கையுடன் போட்டியை எதிர்கொள்ள முடியும். அந்த மனநிலையுடன் தான் இங்கு இறங்கினேன். இந்த ஆடுகளத்தன்மையை நான் நன்கு அறிவேன். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக இருந்தது என்று நீங்கள் கூறலாம். என்னை பொறுத்தவரை பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்குமே ஒத்துழைப்பு தந்தது என்று சொல்வேன். இந்தியாவில் நான் ஆடிய சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.