பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளித்த நாளை அமைச்சரவை கூடுகிறது
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9-ந்தேதி கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாக கூறினார்.
இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இப்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பாக சட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மசோதா வருகிற 20-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை (19-ந்தேதி) 4 மணிக்கு கூடுகிறது.
கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.