ஜாப்ரா ஆர்சர் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் – ராஜஸ்தான் ராயல் நம்பிக்கை
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது ஆர்சரின் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வலி அதிகமாக இருக்க 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. தொடர்ந்து வலி இருந்ததால் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. மேலும் டி20 தொடரில் இருந்து விலகி சொந்த நாடு திரும்பினார்.
அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது முழங்கையில் முறிவு மிகப்பெரிய அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை தொடர், ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
மேலும், அணி டாக்டர்களுடன் இணைந்து காயம் குணமடைந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு தயாராகுவதற்கான பணியில் ஈடுபடுவார். ஜூன் மாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகுவார் என்று தெரிவித்திருந்தது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்துள்ளது. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் ஜாப்ரா ஆர்சருக்கான மாற்று வீரரை உடனடியாக தேடவேண்டியதில்லை. அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெக்டொனால்டு கூறுகையில் ‘‘ஜாப்ரா ஆர்சர் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என்பதற்கான சரியான காரணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால், அவர் குணமடையலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவரது காயம் குறித்த முழு விவரத்தையும் பெறுவோம். அதன்பின் முடிவு செய்வோம்.
அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். தற்போது காயம் குறித்த செய்தி மோசமானதாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நேரம் வரை அவரை மாற்றுவதற்கான எந்த துரித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம்’’ என்றார்.