காஷ்மீர் பிரச்சினையில் தலையிட மீண்டும் ஆர்வம் காட்டும் டொனால்ட் டிரம்ப்!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசி உள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
‘காஷ்மீரைப் பற்றியும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே என்ன நடக்கிறது என்பது பற்றியும் இருவரும் பேசினோம். எங்களால் உதவ முடிந்தால், நாங்கள் நிச்சயமாக உதவுவோம். இரு நாடுகளுடையிலான பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்று டிரம்ப் தெரிவித்தார்.
‘இந்தியாவுடனான பிரச்சினை பெரிய பிரச்சினை. வேறு எந்த நாட்டினாலும் முடியாது என்பதால், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் அமெரிக்கா தனது பங்கை வகிக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்’ என இம்ரான் கான் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாடு மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் இதில் தலையிட ஆர்வம் காட்டுகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு 4-வது முறையாக காஷ்மீர் விஷயத்தில் டிரம்ப் தனது விருப்பத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.