Tamilவிளையாட்டு

ரோகித் சர்மா ஆட்டம் சிறப்பாக இருந்தது – கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி பழிதீர்த்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன் குவித்தது.

முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 131 ரன்னும் (14 பவுண்டரி, 1 சிக்சர்), லபுஷ்சேன் 54 ரன்னும் (5 பவுண்டரி), அலெக்ஸ் கேரி 35 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர்.

முகமது ‌ஷமி 4 விக் கெட்டும், ஜடேஜா 2 விக் கெட்டும், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பும்ரா விக்கெட் எடுக்காவிட்டாலும் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 287 ரன் இலக்கை 15 பந்து எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் 128 பந்தில் 119 ரன்னும் (8 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் வீராட் கோலி 91 பந்தில் 89 ரன்னும் (8 பவுண்டரி), ஷிரேயாஸ் அய்யர் 35 பந்தில் 44 ரன்னும் ( 6 பவுண்டரி, 1 1 சிக்சர்) எடுத்தனர். ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹாசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

ஆஸ்திரேலிய அணி கடந்த மார்ச் மாதம் இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. தற்போது அதற்கு இந்திய அணி தொடரை வென்று சரியான பதிலடி கொடுத்தது.

இந்த வெற்றி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-

எங்களது தொடக்கம் நன்றாக அமைந்தது. ராகுலும், ரோகித்தும் திறமை வாய்ந்தவர்கள். ராகுல் ஆட்டம் இழந்த பிறகு சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பந்து நன்றாக திரும்பியது. இதனால் பொறுமையுடன் ஆட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்கு அனுபவம் உதவியாக இருந்தது.

ரோகித் சர்மாவும் நானும் அனுபவம் வாய்ந்தவர்கள். நிலைத்து நின்று பார்ட்னர் ஷிப் அமைப்பது முக்கியம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

ரோகித் சர்மாவின் ஆட்டம் அழகாக இருந்தது. நான் களம் வருவதற்கு முன்பே அவர் ஆட்டத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்தமுறை ஆடியதை விட அந்த அணி தற்போது வலுவாக இருந்தது. ஸ்டீவ்சுமித், வார்னர், மார்னஸ் லபுஷ் கேன் தற்போது உள்ளனர். மேலும் திறமை வாய்ந்த பந்து வீச்சையும் கொண்டது. பீல்டிங்கிலும் முத்திரை பதித்தவர்கள்.

முதல் 2 ஆட்டத்தில் வென்று கடைசி 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தோம். தற்போது முதல் ஆட்டத்தில் நாங்கள் தோற்று கடைசி 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து மேல்நோக்கி செல்ல விரும்புகிறோம்.

ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார். இதனால் பேட்டிங்கை வலுப்படுத்திக் கொள்ளலாம். இதனால் அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை.

இவ்வாறு வீராட்கோலி கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *