‘அரண்மனை 3’ ஹீரோவான ஆர்யா!
வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.
இதுதவிர, ராகவா லாரன்சின் காஞ்சனா, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகமும் வந்துள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே 2 பாகங்களாக வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.
அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகி கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவிடமும் பேசி வருகின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.