பிரதமர் மோடி தலைமையில் மகனின் திருமணத்தை நடத்த விரும்பும் விஜயகாந்த்!
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கடந்த ஒரு வருட காலமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார்.
விஜயகாந்த் குடும்பம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டில் நடக்கும் முதல் சுப நிகழ்வு என்பதால் இந்த திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என விஜயகாந்தும் பிரேமலதாவும் விரும்புகிறார்கள். விஜயகாந்த் தனது மகன் திருமணத்தை பிரதமர் மோடி தலைமையில் நடத்த வேண்டும் என்று விரும்புகிறாராம்.
இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் மோடியை அணுகி தேதி கேட்க பிரேமலதா விஜயகாந்தும், அவரது தம்பி எல்.கே.சுதீசும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக திருமண நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுப்பதை விரும்பாதவர் பிரதமர்மோடி. பாதுகாப்பு காரணங்களுக்காக திருமண வீட்டாருக்கு அதிகாரிகள் தொல்லை தந்துவிடக் கூடாது என்பதில் மோடி கவனமுடன் இருப்பார். ஆனால் விஜயகாந்திற்காக தேதி கொடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.