புரோ லீக் ஹாக்கி தொடக்கம் – இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதல்
உலகின் தலைச்சிறந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான 2-வது புரோ லீக் ஹாக்கி போட்டி இன்று தொடங்கி ஜூன் மாதம் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.
இதில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா, உலக சாம்பியன் பெல்ஜியம், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறுகிறது. அந்த போட்டிக்கு தயாராவதற்கு புரோ லீக் கனகச்சிதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-ம் நிலை அணியான நெதர்லாந்தை ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
2018-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று இருந்தது. அதற்கு பழிதீர்க்க இது அருமையான வாய்ப்பாகும். இந்த மைதானத்தில் தான் இந்திய அணி அதிகமான பயிற்சியை மேற்கொள்வதால் அது சாதகமான அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் அதாவது நாளையே இதே மைதானத்தில் இந்திய அணி மீண்டும் (மாலை 5 மணி) ஒரு முறை நெதர்லாந்துடன் மோதும்.
இந்திய அணி தனது அடுத்த சுற்றில் பெல்ஜியத்தை பிப்ரவரி 8 மற்றும் 9-ந்தேதிகளிலும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை பிப்ரவரி 21 மற்றும் 22-ந்தேதிகளிலும் இதே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதன் பிறகு இந்திய அணி ஏப்ரல் 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஜெர்மனியை அவர்களது இடத்தில் (பெர்லின்) சந்திக்கிறது. தொடர்ந்து லண்டனில் நடக்கும் ஆட்டங்களில் இங்கிலாந்துடன் (மே 2 மற்றும் 3-ந்தேதி) மோதுகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், ‘புரோ ஹாக்கியில் முதலில் டாப்-3 அணிகளை எதிர்கொள்ள உள்ள நிலையில் இந்த போட்டியை வலுவாக, சாதுர்யமாக தொடங்க வேண்டியது முக்கியமாகும். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக எங்கள் அணியின் அடிப்படை கட்டமைப்பை சரியாக உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.