Tamilசினிமா

பாடகர் ஜேசுதாஸுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்!

கேரளாவை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், சினிமா பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் கடந்த 1940-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பிறந்தார். இவருக்கு நேற்று 80-வது பிறந்த நாள் ஆகும்.

இதையொட்டி அவர் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். கேரள பாரம்பரிய உடையில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்ட அவருக்கு, அங்கு குழுமியிருந்த ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பாடகர் ஜேசுதாசின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘80-வது பிறந்தநாள் கொண்டாடும் பன்முக திறன் வாய்ந்த ஜேசுதாஸ்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மெல்லிசையும், ஆன்மாவை ஈர்க்கும் குரலும் அனைத்து வயதினரிடையேயும் அவரை பிரபலமாக்கியது. இந்திய கலாசாரத்துக்கு அவர் மதிப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளார். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், ஜேசுதாசுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இதைப்போல திரைத்துறை, இசைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல், சமூக தலைவர்கள் என ஏராளமானோர் ஜேசுதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

1961-ம் ஆண்டு முதல் இசைத்துறையில் தனது இனிய குரலால் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேசுதாஸ், கர்நாடக இசை பஜனைகள், பக்தி பாடல்கள், திரைப்பட பாடல்கள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இதில் திரைப்பட பாடல்கள் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேல் பாடியுள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காளி, ஒடியா என பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடியுள்ள ஜேசுதாஸ், ஆங்கிலம், அரபி, லத்தீன் மற்றும் ர‌ஷியன் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருப்பது சிறப்பாகும். கேட்போரை கவர்ந்திழுக்கும் தெய்வீகமான குரலுக்கு சொந்தக்காரரான அவர், ‘கான கந்தர்வன்’ என இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

நாட்டின் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவரான ஜேசுதாஸ் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 8 முறையும், கேரள அரசின் விருதை 25 முறையும், தமிழகம் மற்றும் ஆந்திர அரசின் விருதுகளை முறையே 5 மற்றும் 4 முறையும் பெற்றுள்ளார். ஜேசுதாசின் கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ, பத்மபூ‌‌ஷண், பத்மவிபூ‌‌ஷண் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *