தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறப் போகும் ஆஸ்கார் விருது விழா!
சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.
யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். ஆனால் கடந்த ஆண்டு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் நடந்ததால் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் 10-ந்தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. அதே சமயம் விழாவில் புதுவகையான கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆச்சரியங்கள் இருக்கும் என ‘ஏபிசி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.