Tamilசெய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000 நாளை முதல் விநியோகம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை நவம்பர் 29-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் தொடங்கி வைத்தார்.

கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் பொங்கல்பரிசு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் நாளை (9-ந்தேதி) முதல் வருகிற 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கடந்த 2-ந்தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

அதில் 2020-ம் ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஜனவரி 9-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கி முழுமையாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 35 ஆயிரம் ரே‌ஷன் கடைகளில் நாளை (9-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்க வங்கிகள் மூலம் பணம் எடுத்து ரே‌ஷன் கடை ஊழியர்கள் தயார் நிலையில் கையில் வைத்துள்ளனர்.

ரே‌ஷன் கடைகளில் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத் தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு இல்லை என்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ‘ஒருமுறை கடவுச்சொல்’ அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்பட்டதும், குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொங்கல் பரிசு வழங்கியதை உறுதி செய்யும் வகையில் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறப்படும்.

இதில் சர்க்கரை ரே‌ஷன் கார்டுகளுக்கு 1,000 ரூபாய் ரொக்கப்பணம் கிடையாது.

கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 2.5 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *