உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 2வது நாளாக தொடர்கிறது
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான ஓட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதன்பின்னர் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டுகளை பிரிப்பதற்கே மதியம் வரை ஆகிவிட்டது.
நேற்று மாலையில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னிலை நிலவரம் வெளியானது. ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி விடிய விடிய நடைபெற்றது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இன்று காலை, 4548 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில், திமுக கூட்டணி 2131 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1946 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 471 பதவிகளை கைப்பற்றின.
இதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 449 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக கூட்டணி 234 இடங்களிலும், திமுக கூட்டணி 213 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றவை 2 இடங்களை கைப்பற்றின.