தமிழக உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலின்போது 76.19 சதவீதம் வாக்குகளும் 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன.
சுமார் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டு சீட்டுகள் அடங்கிய அனைத்து வாக்குப்பெட்டிகளும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள 315 மையங்களில் இந்த வாக்குப்பெட்டிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த தேர்தலில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குச் சீட்டுகளில் வாக்குகளை பதிவு செய்து உள்ளனர். முதலில் ஓட்டு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள 30 மேஜைகளில் ஓட்டுகள் கொட்டப்படுகின்றன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3 ஓட்டு எண்ணுபவர்கள் பணியில் உள்ளனர். இவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு பதிவான ஓட்டுகளை அடுக்கி, தனித்தனியாக பிரிக்கிறார்கள்.
4 பதவிகளுக்கும் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 4 அறைகளுக்கும் அந்தந்த அறைகளுக்கான ஓட்டுகள் கொண்டு செல்லப்படுகின்ன. பின்னர் யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி வாரியாக போடப்பட்ட வாக்குகள் பிரித்து எண்ணப்படுகின்றன.
8 ரவுண்டுகளாக ஓட்டுகள் எண்ணும் பணி நடக்கும். ஓட்டுகளை பிரிக்கும் பணியே இன்று பகல் 1 மணிக்கு மேல் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஓட்டுகள் எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன.