நாகலாந்து மாநில சபாநாயகர் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்
நாகாலாந்து மாநில சபாநாயகராக பதவி வகித்து வந்தவர் விகோவோ யோஷூ (வயது 69). இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாகாலாந்து சபாநாயகர் விகோ வோ யோஷூ மறைவு குறித்து செய்தி அறிந்து கடும் வேதனை அடைந்தேன். அவர் விடாமுயற்சியுள்ள தலைவர். நாகாலாந்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இந்த சோகமான தருணத்தில் எனது எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினருடன் இருக்கின்றன. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் உயர்ந்த மற்றும் முக்கியமான தலைவரை இழந்திருப்பதாக ஆளுநர் தனது இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். மேலும், சபாநாயகர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலத்தில் மூன்று நாட்கள் (ஜனவரி 1-ம் தேதி வரை) அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஆளுநர் அறிவிதுதுள்ளார்.
மறைந்த ஆளுநரின் உடல் அவரது சொந்த ஊரான கிக்வேமாவில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை காலை 11 மணிக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.
தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான விகோவோ யோஷூ, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாகாலாந்து மாநிலத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.