தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப் பச்சன்!
தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்தார்.
இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.