மக்களுக்கு இடையூறு செய்த போராட்டம் – மு.க.ஸ்டாலின் ஆஜராக சம்மன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 2018ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், ஜவாகிருல்லா, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
கடந்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகும்படி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேருக்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே, 26-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேரும் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.