5 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் – ஈசுவரப்பா
சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.
அவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.
சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.
தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.