4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பான அளவிற்கு பெய்துள்ளது. பருவமழை காலம் முடிவுபெறும் நிலைக்கு வந்துவிட்ட நிலையில் இன்னும் சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய 4 ஏரிகளும் நிரம்பவில்லை.
ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தேவையான அளவு மழை கிடைத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு இந்த ஆண்டு மழை நிறைவாக பெய்துள்ளது.
இந்தநிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி இன்று கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்திலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதால் அடுத்த 24 மணிநேரத்துக்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.