இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் ஒரு நாள் போட்டி! – இன்று சென்னையில் நடக்கிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை போராடித் தான் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் எப்போதும் அபாயகரமானவர்கள். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
கோலி, லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா சூப்பர் பார்மில் உள்ளனர். அதே வேகத்துடன் ஒருநாள் தொடரிலும் ரன்மழை பொழிய காத்திருக்கிறார்கள். ரிஷப் பந்தின் பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
காயமடைந்துள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வாலும், புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் அணியில் இணைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி அதே வீறுநடையை இந்த தொடரிலும் நீட்டிக்க ஆர்வம் காட்டுகிறது.
பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் என்று அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. பந்து வீச்சிலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்துவது தான் அவர்களுக்குரிய சவாலாகும். இதை சரியாக செய்தால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.
பொதுவாக சென்னை ஆடுகளம் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும். இத்தகைய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், கேதர் ஜாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி.
வெஸ்ட் இண்டீஸ்: சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோமரியோ ஷெப்பர்டு அல்லது காட்ரெல், கேரி பியர் அல்லது ஜாசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், கீமோ பால், அல்ஜாரி ஜோசப்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒரு நாள் போட்டி நடக்க உள்ள நிலையில் மழையால் போட்டிக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று ஒரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். ஆனால் இன்றைய தினம் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் ஆட்டம் பாதிப்பின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.