தொடர் உண்ணாவிரதம்! – சுவாதி மாலிவால் மருத்துவமனையில் அனுமதி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கடந்த 3-ம் தேதி முதல் டெல்லி ராஜ்கட் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சுவாதி மாலிவாலை டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயாரும் தந்தையும் சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், இன்று திடீரென மயக்கமடைந்தார்,
13 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் அவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு சுவாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.