அசாமில் நீடிக்கும் கலவரம் – ஐ.எஸ்.எல், ரஞ்சி போட்டிகள் நிறுத்தி வைப்பு
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.
குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக நேற்று நடைபெற இருந்த ரஞ்சி டிராபி மற்றும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
அசாம் மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியும், சென்னையின் எப்.சி. மற்றும் கவுகாத்தி எப்.சி. அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஐ எஸ் எல் கால்பந்து போட்டியும் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.