Tamilசெய்திகள்

மாமனார், மாமியாரை கவனிக்காத மருமகளுக்கு தண்டனை! – சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது

பெற்றோர், மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிப்பதற்கான சட்டம், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இதில், மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காத மருமகனுக்கும், மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பராமரிப்பு செலவு உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதிகமாக சம்பாதிப்பவர்கள், அதிக தொகை கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது 3 மாதம் ஜெயில் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ கிடைக்கும்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜனதாவின் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன், மக்களவையில் பிரச்சினை எழுப்பினார். பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்தும், முத்திரையும் இடும் பக்கத்தில் செவ்வக வடிவத்துக்குள் தாமரை இருப்பதாக அவர் கூறினார்.

இதுதொடர்பான செய்தி வெளியான பத்திரிகையை என்.கே.பிரேம சந்திரன் காண்பித்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியதை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த 381 பேருக்கும், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 2 ஆயிரத்து 307 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதை தெரிவித்தார்.

இவர்களில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மட்டும் 927 பேர் ஆவர்.

பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு துறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களை செய்து வருவதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் மக்களவையில் கூறினார். இது தொடர்ச்சியான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு மசோதா, கூட்டு தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழு, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பு தனது அறிக்கையை அளிக்கும்.

பணியாளர்கள் சமூக பாதுகாப்பு தொடர்பான 9 சட்டங்களை ஒருங்கிணைக்கவும், திருத்தம் செய்வதற்குமான மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த சமூக பாதுகாப்பு சட்டம், பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள், வருங்கால வைப்புநிதிக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்று இச்சட்டம் சொல்கிறது. பணிக்கு வரும்போது விபத்தில் சிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *