புதிய சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றுள்ள நாகேஷ்வர ராவின் அதிரடி!
புதிய சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிகமாக இணை இயக்குனராக இருந்த நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் பதவி ஏற்ற அவர் அடுத்தடுத்து பல நடவடிக்கைகளை எடுத்தார். அலோக் வர்மா மற்றும் அஸ்தானா மீதான ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்க புதிய குழுவை நியமித்தார்.
மேலும் 14 அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்தும் உத்தரவிட்டார். சி.பி.ஐ.யில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிரடி நடவடிக்கையின் கதாநாயகனான நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர். வாரங்கல் மாவட்டம் மங்க பேட்டா மண்டலம் போரு நர்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
மங்கபேட்டா அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டு இருந்த போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஒடிசாவில் பணி நியமனம் செய்யப்பட்ட பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலும் பணியாற்றினார். ஒடிசா மாநில டி.ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தென் மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இவர் பொறுப்பேற்ற பின்புதான் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. செல்லாத நோட்டு அறிவிப்பின்போது சட்ட விரோதமாக புதிய பணம் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்பு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது மேலிட உத்தரவுப்படி அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமான இடைத்தரகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட ரூ.90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும். 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.
காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையிலும் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டது. முன்னதாக தமிழக சட்டசபை தேர்தலின்போது நடந்த சோதனையும் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதன் காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.
இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆதரவைப் பெறுவதற்காக பா.ஜனதா நடத்தியது என்று அரசியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் நாகேஷ்வரராவ் முக்கிய பங்கு வகித்தார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.