18 எம்.எல்.ஏ-க்கள் பதவி நீக்கம் வழக்கு தீர்ப்பு ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது – தொல்.திருமாவளவன்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் நீதிபதி அறிவித்தார். மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
இந்த தீர்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும் முதல்வர் தரப்பினர் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கூறினார்.