மகாராஷ்டிராவின் புதிய கூட்டணி அரசின் வழிகாட்டியான சரத் பவார்!
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மகாராஷ்டிரா மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னதாக நேற்று சாம்னாவின் தலையங்கத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி கூட்டணி அரசின் ‘வழிகாட்டி’ என சரத்பவாருக்கு சிவசேனா புகழாரம் சூட்டி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கடந்த செவ்வாய்க்கிழமை அஜித்பவாரை தொடர்பு கொண்டு பா.ஜனதாவை ஆதரிக்கும் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யவைத்து மாநில அரசியல் நாடகத்தின் ‘மேன்ஆப் தி மேச்’ நிகழ்வாக கருதப்படுகிறது.
இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வலிமையான, அனுபவம் வாய்ந்த மற்றும் ‘வழிகாட்டி’ போன்ற சரத்பவார் எங்களுடன் உள்ளார். யாரையும் ஏமாற்றும் நோக்கத்துடன் எங்களது அரசு செயல்படாது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்றபோது நாடு முழுவதும் மக்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ, அதுபோன்ற மகிழ்ச்சி தான் தற்போது மகாராஷ்டிராத்தில் உள்ளது.
நாடு முழுவதும் முக்கிய தலைவர்கள் டெல்லி ஆட்சியாளர்களின் முன் மண்டியிட்டனர். ஆனால் உத்தவ் தாக்கரே அது போன்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் அடிபணியாமல் இருந்தார்.
உத்தவ் தாக்கரே அவரது புகழுடன் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவரிடம் பொய் பேசியவர்களுடன் கைகோர்க்க மறுத்துவிட்டார். அரசு எந்திரம் யாருக்கு எதிராகவும் சதி திட்டங்களை தீட்டும் வேலையில் ஈடுபடாது. 3 காலில் நிற்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சி நிலைக்காது என கூறி முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளார்.
மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பதில் 3 கட்சிகளுக்குள் எந்த குழப்பமும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.