இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி – கங்குலி முடிவு
இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி நடைபெற்ற நாட்களில் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை ரசித்தனர். இந்நிலையில் பிங்க் பால் டெஸ்ட் கொல்கத்தாவில் மட்டும் நடத்திக் கொண்டிருக்க முடியாது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் வந்தது நிம்மதி அளிக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்த நாங்கள் நிறைய பணிகளை செய்தோம். டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.