பாகிஸ்தான் அணியின் 16 வயது வீரர் குறித்து எழுந்த புதிய சர்ச்சை!
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அறிமுகம் ஆனார்.
அவருக்கு 16 வயது 279 நாட்களே ஆனது. இதனால் மிக இளம் வயதில் சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆன முகமது கைப் இவரது வயது குறித்து டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபலமான விளையாட்டுத்துறை ஆசிரியர் (Sports Editor) ‘‘சிறப்பாக பந்து வீசும் 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா-வை பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான குவேட்டா கிளாடியேட்டர்ஸ் ஒப்பந்தம் செய்தது. அவருக்கு முதுகு வலி காயம் ஏற்பட்டுள்ளது.
அவர் மீண்டும் பயிற்சி மேற்கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் 4-வது சீசனில் விளையாட உடற்தகுதி பெறுவதாக நம்புகிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டரை மேற்கோள் காட்டி முகமது கைப் ‘‘இது ஒரு மிகப்பெரிய கணிப்பு. தற்போது 16 வயதாகிறது. வயது பின்னோக்கி செல்லும் என நினைக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதைவைத்து டுவிட்டர்வாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.